Friday 19 October 2012

நித்யாசாமியின் மகிமைகள்- ஒலக எழுத்தாளர் சாரு நிவேதிதா !!!


முதலில் எனக்கு நடந்த அதிசயத்தைச் சொல்லி விட்டு அந்த மருத்துவமனை உதவியாளரிடம் வருகிறேன். ஒரு சில அசாதாரணமான மனிதர்களின் அசாதாரணமான பழக்க வழக்கங்களைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறோம். உதாரணமாக, சில சூமோ வீரர்கள் மற்றும் நீச்சல் வீரர்களின் உணவுப் பழக்கம். காலையில் 10 முட்டை, ஒரு கிலோ மாமிசம், இரண்டு லிட்டர் பால்; மதியம் பத்து கோழி, 20 முட்டை, 2 கிலோ காய்கற்கள் என்று இப்படியாகப் போகும் அவர்களுடைய உணவுப் பட்டியல். அப்படி ஒரு நீச்சல் வீரர் சென்ற முறை நடந்த ஒலிம்பிக் போட்டியில் ஏழெட்டு தங்கப் பதக்கங்களை தனி ஆளாக அள்ளியதையும் நாம் அறிவோம். அதே போல் என்னைப் பீடித்திருந்தது காமப் பசி. சுமார் 15 வயதிலிருந்து இந்த 56 வயது வரை சற்றும் குறையாமல் அதிகரித்துக் கொண்டே இருந்தது அந்தத் தீ. நானும் அதை ஒரு குறையாகவும் எண்ணவில்லை. மேலே குறிப்பிட்ட அசாதாரணங்களைப் போல் இதுவும் ஒரு அசாதாரணம் என்று நினைத்து அதனுடனேயே ஒத்து வாழப் பழகி கொண்டேன். ஆனால் அது ஒன்றும் அவ்வளவு சுலபமான விஷயமாக இல்லை. காமம் புசிக்க கடைக்கா செல்ல முடியும்? நிச்சயமாகச் சொல்கிறேன். என்றைக்குமே அதை நான் ஒரு குறையாக நினைத்ததில்லை.



சென்ற மாதம் நடந்த கல்பதரு நிகழ்ச்சியில் இரண்டாவது முறையாக நித்யானந்தரை மிக நெருக்கத்தில் தரிசித்தேன். முதல் முறை, இந்த ஆண்டு (2009) ஜனவரியில் நடந்த புத்தக விழாவில் நேருக்கு நேர் பார்த்திருந்தேன். ஆனால் அப்போது அவருடைய பெயரைத் தவிர வேறு எதுவும் அவரைப் பற்றித் தெரியாது. இந்த இரண்டு தரிசனங்களுக்கும் இடையில் பாண்டிச்சேரியிலிருந்து வரும் வழியில் நெடுஞ்சாலையில் கிடைத்த தரிசனம் இதிகாசம் புராணம் போன்றவைகளில் மட்டுமே காணக் கூடியது. மனித உருவத்தில் இருக்கும் ஒருவர் ஒரே சமயத்தில் உலகின் பல்வேறு இடங்களில் பல்வேறு மனிதர்களுக்கு ஸ்தூல வடிவிலேயே காட்சியளிக்கும் அற்புதம் அது.



யூஜின் ஓ நீல் எழுதிய நாடகம் ஒன்று Desire Under the Elms. இந்த நாடகத்தை நீங்கள் படித்திருக்காவிட்டால் இதன் கதைச் சுருக்கத்தையாவது படித்து விடுங்கள். மனித மனதில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஃப்ராய்டியன் இச்சையானது எவ்வளவு தூரமெல்லாம் சென்று, என்னவெல்லாம் செய்யக் கூடியது என்பதை கிரேக்க நாடகங்களுக்கு இணையாக எழுதியிருக்கிறார் யூஜின் ஓ நீல். சுருக்கமாகச் சொல்வதானால் , இந்த நாடகத்தை நீட்ஷேவின் டயோனீஷிய அனுபவம் ( Dionysian experience) என்று கூறலாம். என்னுடைய எழுத்துக்களில் பரிச்சயமுள்ளவர்கள் அவற்றில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் டயோனீஷியன் அனுபவம் பற்றிப் புரிந்து கொள்ளலாம். எல்ம் மரத்தின் கீழ் பீறிட்ட இச்சை பற்றி ஓ நீல் எழுதியது 1924-இல். ஆனால் கல்ப விருட்சத்தின் கீழ் கிடைக்கும் வரம் பற்றி வியாசர் எழுதி 3000 ஆண்டுகள் ஆகிறது. (Kalpataru, the divine tree of life being guarded by mythical creatures Kinnara and Kinnari, flying Apsara and Devata. 8th century Pawon temple, Java, Indonesia)



கல்பதருவைப் பற்றி ஒரு சுவாரசியமான கதை இருக்கிறது. விறகு வெட்டி ஒருவன் காட்டில் மரங்களை வெட்டிக் கொண்டிருக்கும்போது மிகுந்த களைப்பின் காரணமாக ‘இந்த மரங்களெல்லாம் தானே வெட்டி அடுக்கிக் கொள்ளக் கூடாதா? ’ என்று நினைத்தானாம். உடனே அவன் நினைத்தது போலவே மரங்களெல்லாம் விறகுகளாக மாறி, கட்டப்பட்டு அவன் முன்னே கிடந்தன. அப்போதுதான் அவனுக்குப் புரிந்தது, தான் அமர்ந்திருக்கும் மரம் கல்பதரு என்று. கல்பதரு என்றால் நினைத்ததை எல்லாம் நடத்தித் தரும் மரம் என்று அவன் கேள்விப்பட்டிருக்கிறான். ’ ஆஹா! இப்போது ஒரு அழகான பெண் இருந்தால் எப்படி இருக்கும்! ’ என்று நினைக்கிறான். உடனே அங்கே ஒரு பேரழகி அவனருகே அமர்கிறாள். பிறகு அவன் ஒரு அரண்மனை வேண்டும் என்று நினைக்கிறான். அரண்மனையும் தோன்றுகிறது. அரண்மனையில் அவனுக்கு ஏகப்பட்ட வேலையாட்கள் பணி செய்யக் காத்திருக்கிறார்கள். அவனுக்கு அற்புதமான விருந்து பரிமாறப்படுகிறது. இப்படியே அவன் நினைப்பது எல்லாமே அங்கே நடந்து கொண்டிருக்கிறது. அப்போது சூரிய அஸ்தமன நேரம் நெருங்குகிறது. அப்போது அவனுக்குள் ஒரு எண்ணம் தோன்றுகிறது. நாம் இருப்பதோ ஒரு காடு. இருள் வேறு சூழ்ந்து விட்டது. இப்போது ஒரு புலி வந்து நம்மை அடித்துத் தின்று விட்டால் என்ன செய்வது? எண்ணத்தின்படியே புலி அந்த விறகு வெட்டியை அடித்துத் தின்கிறது.

***

பரமஹம்ஸ நித்யானந்தரின் கல்பதரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு மகாபாரதத்தில் வரும் வரம் தரும் கல்பதருவே இந்தக் கல்பதரு நிகழ்ச்சியும் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் ஞானானந்த ஆச்சாரியார் தனது உரையில் குறிப்பிட்ட சில சம்பவங்களைக் கேட்ட பிறகுதான் இந்த நிகழ்ச்சி பற்றி எனக்குச் சரியாகப் புரிந்தது. ஆனால் சில பேர் மேலே குறிப்பிட்ட விறகுவெட்டியைப் போல் இந்த வரத்தை வீணாக்கி விடுகிறார்கள் என்றும் தெரிந்து கொண்டேன். உதாரணமாக, நித்யானந்தர் என்ற கல்பதருவிடம் வந்த ஒருவன் “நான் இந்த நாட்டின் பிரதம மந்திரி ஆக வேண்டும் ” என்று கேட்டானாம். அதற்கு நித்யானந்தர் “முதலில் உன்னுடைய அழுக்கான வேஷ்டியைத் துவைத்துக் கட்டு; பிறகு கேள் அந்த வரத்தை ” என்று சொல்லி அனுப்பியிருக்கிறார்.



இது பற்றித் தனது உரையில் சற்று வருத்தத்துடனே குறிப்பிட்டார் நித்யானந்தர். ஒரு அரசன் தன் பிரஜைகளிடம் அவர்கள் என்ன கேட்டாலும் தருவதாகக் கூறுகிறான். ஆனால் அவனிடம் வருபவர்களோ அன்றைய சமையலுக்கு வேண்டிய அரைக் கிலோ கத்தரிக்காயை மட்டும் கேட்டு வாங்கிக் கொண்டு போய் விடுகிறார்கள். அதைப் போலவே என்னிடமும் அரைக்கிலோ கத்தரிக்காயை வாங்கிச் செல்லவே நீங்கள் பிரியப்படுகிறீர்கள். கத்தரிக் காய் கொடுப்பதில் எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. நீங்கள் கேட்டதைத் தருகிறேன். அதோடு மேலும் கொஞ்சம் உங்களுக்குக் கொடுக்க விரும்புகிறேன். அதற்கு அனுமதியுங்கள். வேறு ஒன்றும் இல்லை. என்னிடமுள்ள தீபத்தைக் கொண்டு உங்கள் வாழ்க்கையில் ஒளியேற்ற வேண்டும். நீங்கள் அனுமதித்தால் மட்டுமே அதை என்னால் செய்ய முடியும்.



ஆம். அவர் நம்முடைய வாழ்வில் ஒளியை ஏற்ற நாம் அனுமதிக்க வேண்டும். இல்லாவிட்டால் கடவுளாலும் ஒன்றும் செய்ய முடியாது. ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டார் நித்யானந்தர். ஸ்வாமியை அமெரிக்காவில் ஒரு தம்பதி சந்தித்திருக்கின்றனர். அவர்களின் குழந்தைக்கு ஆட்டிஸம் பிரச்சினை. பிறந்ததிலிருந்தே ஒரு வார்த்தை பேசவில்லை. அந்தத் தம்பதி தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். தெலுங்கும், ஆங்கிலமும் தவிர வேறு எந்த மொழியும் தெரியாது. நித்யானந்தரிடம் தங்கள் குழந்தையை சொஸ்தப்படுத்துவதற்காக அழைத்து வந்திருக்கின்றனர். அந்தப் பிள்ளைக்கு எட்டு வயது இருக்கும். பிள்ளையின் தலை மீது தனது கரங்களை வைக்கிறார் நித்யா.

” எட்ரா கையை… ”சுத்தமான ‘சென்னைத் ’ தமிழில் சொன்னதாகச் சொல்கிறார் நித்யா. பிள்ளை கூறிய வார்த்தைகளை ஸ்வாமியால் எங்களிடம் திருப்பிச் சொல்ல முடியவில்லை. அதனால் ’ சுத்தமான சென்னைத் தமிழ் ’ என்கிறார்.

“ஏன் தம்பி கையை எடுக்கச் சொல்கிறாய்? உன்னை குணப்படுத்துவதற்காகத்தானே இதைச் செய்கிறேன்? ”

” எனக்கு என்ன வேணும்னு எனக்குத் தெரியும். நீ கையை எட்ரா… ”

மீண்டும் சென்னைத் தமிழ். நித்யாவுக்கு ஒன்றும் புரியவில்லை. முதலில் ஏதாவது பேய் பிசாசா, ஆவியா என்ற சந்தேகம் தோன்றுகிறது. ம்ஹும். அப்படியிருக்க வாய்ப்பு இல்லை. அவதார புருஷர்கள் இருக்கும் பிரதேசத்தில் அம்மாதிரிப் பிரச்சினைகள் இருக்க வாய்ப்பில்லை. பிறகு அந்தப் பையனிடமே மீண்டும் மீண்டும் கேட்கிறார் நித்யா. இவ்வளவுக்கும் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த அந்தப் பிள்ளைக்கு சென்னைத் தமிழ் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. அதோடு பிறந்ததிலிருந்தே இப்போதுதான் முதல் முதலாகப் பேசுகிறான். பிறகு ஸ்வாமி அந்தப் பிள்ளையைத் தொடர்ந்து கேட்ட பிறகு தெரிந்த விஷயம் என்னவென்றால், அந்தச் சிறுவனின் ஆத்மா தான் சொஸ்தப்படுத்தப்படுவதை விரும்பவில்லை. போன ஜென்மத்தில் மிகவும் கசப்பான அனுபவங்களே கிடைத்திருக்கின்றன. எத்தனையோ பேருக்கு எவ்வளவோ கொடுத்தும் திரும்ப அந்த உயிருக்கு எதுவுமே கிடைக்கவில்லை. அதனால் உலக வாழ்க்கையின் மீது கசப்பும் வெறுப்பும் மிகுந்த அந்த ஆத்மா இந்த ஜென்மத்தில் இந்த உலகத்துக்கு எதையுமே கொடுக்க விரும்பவில்லை; எந்தப் பொறுப்பையும் எடுத்துக் கொள்ள இஷ்டமில்லை.



” இப்போது உனக்கு எட்டு வயதுதான் ஆகிறது. இன்னும் 70 ஆண்டுகள் வாழ்வதாக வைத்துக் கொண்டால் அந்த 70 ஆண்டுகளும் நீ இப்படியே கஷ்டப்பட வேண்டுமா? அது தேவைதானா? ” ஸ்வாமி கேட்கிறார்.



” தயாராகத்தான் வந்திருக்கிறேன் ” என்கிறான் சிறுவன்.



” சரி, நீ இதைத் தாங்கிக் கொள்ளத் தயாராக இருந்தாலும் உன் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இது எவ்வளவு கஷ்டம்? மிக நல்ல மனிதர்களான அவர்களுக்கு இந்தச் சிரமம் தேவைதானா? ”



“ அவர்கள் நல்லவர்கள் என்பதால்தான் அவர்களுக்கு மகனாகப் பிறந்தேன். ” ஆக, பரமஹம்ஸ நித்யானந்தர் சொஸ்தப்படுத்த நினைத்தாலும் அந்தச் சிறுவனின் ஆத்மா அதை விரும்பாததால், அவனுடைய வாழ்வில் ஒளி ஏற்றுவதற்கு அனுமதிக்காததால் அவரால் ஏதும் செய்ய முடியவில்லை. இந்தச் சம்பவத்தை விவரித்து விட்டு நித்யா சொன்னார், அப்போதுதான் நான் ஒரு விஷயத்தை முதல் முதலாகப் புரிந்து கொண்டேன். ஒரு ஆத்மா தயாராக இல்லாவிட்டால் கடவுளால் கூட அந்த ஆத்மாவுக்கு எதுவும் செய்ய முடியாது. அதனால்தான் அவர் நம் ஒவ்வொருவரையும் இறைஞ்சுகிறார்; கெஞ்சுகிறார். என்னிடம் இருப்பதை உங்களுக்குத் தருவதற்கு அனுமதியுங்கள் என.

***

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த கல்பதருவில் சுமார் 1000 பேர் கலந்து கொண்டிருப்போம் என்று நினைக்கிறேன். எல்லோரையும் சந்தித்து, எல்லோருடையை குறையையும் கேட்டு, எல்லோருக்கும் வரமளித்துக் கொண்டிருந்தார் நித்யானந்தர். இதில் அவர் பாகுபாடே பார்ப்பதில்லை. எத்தனை ஆயிரம் பேர் இருந்தாலும் சரி; அத்தனை பேரையும் சந்திக்கிறார்; ஒவ்வொருவரிடமும் அவர்கள் சொல்வதைப் பொறுமையுடன் கேட்கிறார். கட்டி அணைத்துக் கொள்கிறார். அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு அதை வழங்குகிறார். என்னுடைய முறை வந்தது. ” நீங்கள் சாமியைப் பற்றி உங்கள் ப்ளாகில் எழுதியிருப்பது பற்றிக் கேள்விப்பட்டேன் ” என்று கூறி விட்டு “உங்களுக்கு என்ன வேண்டும்? ” என்று கேட்டார்.



( நித்யானந்தர் எப்போதும் நான் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதில்லை;

தன்னைப் பற்றிக் குறிப்பிடும் போது சாமி என்றே சொல்கிறார்).



கல்பதருவின் கீழே நின்று கொண்டிருக்கிறேன். என்ன கேட்டாலும் கிடைக்கும். ஆயிரக்கணக்கானவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. ஒரு நபருக்கு ஒரு வினோதமான பிரச்சினை. இரவு இரண்டு மணிக்கு அவருக்குத் தூக்கத்திலிருந்து விழிப்பு வரும். உடனே நாலு பெக் மது அருந்த வேண்டும். இல்லாவிட்டால் அதற்கு மேல் தூக்கம் வராது. மறுநாள் களைப்பாக இருக்கும். வேலையில் கவனம் செலுத்த முடியாது. இதற்காகவே தினமும் மறக்காமல் பாட்டிலை வாங்கி வைத்துக் கொள்வது அவர் வழக்கம். பாட்டில் இல்லாத நாட்களில் பயங்கர பிரச்சினை. கல்பதரு நிகழ்ச்சியில் ஸ்வாமி அவருடைய ஆக்ஞா சக்கரத்தில் தனது கட்டை விரலை வைத்து தீட்சை அளித்திருக்கிறார். அன்றைய தினத்திலிருந்தே அவருடைய அந்த நடுநிசி மதுப் பிரச்சினை அவரிடமிருந்து அகன்று விட்டது.



(நமது தேகத்தில் ஏழு சக்கரங்கள் இருக்கின்றன.

மூலாதார சக்ரம் : முதுகுத் தண்டின் அடிப்பகுதி .

ஸ்வாதிஷ்டான சக்ரம் : நாபியிலிருந்து இரண்டு அங்குலம் கீழே.

மணிப்பூரக சக்ரம் : நாபி .

அனாஹத சக்ரம் : இரண்டு மார்புகளுக்கும் நடுவே.

விஷுத்த சக்ரம் : தொண்டைக் குழி.

ஆக்ஞா சக்ரம் : நெற்றியில் இரண்டு புருவங்களுக்கு மத்தியில்.

சஹஸ்ரஹார சக்ரம் : உச்சந்தலை).



கல்பதருவின் கீழே நின்று கொண்டிருந்த நான் என்னுடைய வாழ்வாதாரமான விருப்பங்களில் ஒன்றைக் கேட்டிருக்கலாம். அவந்திகாவின் வயிற்றுப் பிரச்சினை சரியாக வேண்டும். அவளால் பால் பழங்களைத் தவிர வேறு எதையுமே சாப்பிட முடியாத நிலை. சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்லும் அளவுக்குப் பிரச்சினை ஆகிவிடும். எலி ஜூரம் என்று சொல்லப்படுகிற லெப்டோஸ்பைரோஸிஸ் வந்து தங்கி விட்டுப் போனதிலிருந்து அவளுக்கு இந்தத் தொல்லை. இலக்கியத்தைப் போலவே என் உயிரோடும் உணர்வோடும் கலந்த இன்னொரு விஷயம் இருக்கிறது; அது, பயணம். உலகம் பூராவும் சுற்றி வர வேண்டும் என்ற தீராத ஆசை. கேட்ட வரத்தைத் தரும் கல்பதருவிடம் என்னுடைய அந்த விருப்பத்தை நிறைவேற்றி வைக்குமாறு கேட்டிருக்கலாம். ஆனால், எல்லையற்ற பிரபஞ்ச சக்தி மனித உருவில் என் முன்னே நிற்கும் போது என்னால் எதையுமே யோசிக்க முடியாமல் போய் விட்டது.



ப்ருஹத் ஜாபால உபநிஷத்தின் ஆறாவது பிரமாணத்தில் பரமாத்மா பற்றிய ஒரு அதியற்புதமான, கவித்துவம் ததும்பும் விளக்கம் வருகிறது:

யத்ர ந ஸூர்யஸ்தபதி

யத்ர ந வாயுர்வாதி

யத்ர ந சந்த்ரமா பாதி

யத்ர ந நக்ஷ்த்ராணி பாந்தி

யத்ர நாக்நிர்தஹதி

யத்ர ந ம்ருத்யு :

ப்ரவிஸதி யத்ர ந துகாநி

ப்ரவிஸந்தி ஸதாநந்தம் பரமாநந்தம் ஸாந்தம் ஸாஸ்வதம் ஸதாஸிவம்

ப்ரஹ்மாதி வந்திதம் யோகித்யேயம்

பரம் பதம்

யத்ர கத்வா ந நிவர்தந்தே யோகிந:

எங்கே ஆதவன் சுடுவதில்லையோ

எங்கே காற்று வீசுவதில்லையோ

எங்கே நிலா ஒளிர்வதில்லையோ

எங்கே நட்சத்திரங்கள் மின்னுவதில்லையோ

எங்கே நெருப்பு எரிப்பதில்லையோ

எங்கே மரணமும் துக்கமும் நுழைவதில்லையோ

எங்கே சென்ற யோகி திரும்புவதில்லையோ

அதுவே

எப்போதும் ஆனந்தமயமானதும்

பரமானந்தமயமானதும்

சாந்தமானதும்

சாஸ்வதமானதும்

எப்போதும் மங்களமயமானதும்

ப்ரும்மா முதலிய தேவர்களும் வணங்குகின்றதும் ஆன

யோகிகள் தியானிக்கின்ற பரமபதம்.

இதையே கீதையில் கிருஷ்ணனும் கூறுகிறான்:

ந தத்பாஸயதே ஸூர்யோ ந ஸஸாங்கோ ந பாவக:

யத்கத்வா ந நிவர்தந்தே தத்தாம பரமம் மம

(15ஆவது அத்யாயம்: 6ஆவது ஸ்லோகம்)

எந்த பரமபதத்தை அடைந்த பிறகு மனிதர்கள் ஸம்ஸாரத்துக்குத் திரும்புவதில்லையோ அந்த ஸ்வயம் ப்ரகாசமான பரமபதத்திற்கு சூரியன் ஒளி தருவதில்லை; சந்திரன் ஒளி தருவதில்லை; அக்னியும் ஒளி தருவதில்லை. அதுவே என்னுடைய மேலான ஸ்தானமான பரமபதம். இப்படிப்பட்ட பரமானந்தத்தின் முன், நித்யானந்தத்தின் முன் நின்று கொண்டு நான் எதைக் கேட்பேன்? எதுவுமே கேட்கத் தோன்றவில்லை. இலக்கியம் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தைக் கேட்டு விட்டு இறங்கி விட்டேன். பிறகு பிரக்ஞை தெளிந்த போது அவந்திகாவிடம் ” நீயாவது உன் வயிற்றுப் பிரச்சினை பற்றிக் கேட்டாயா? ” என்று கேட்டேன். அவள், ’ இந்த ஜென்மத்திலேயே இறை சக்தியை உணர வேண்டும் ’ என்று கேட்டிருக்கிறாள். அதற்கு ஸ்வாமி “ரொம்ப ரொம்பப் பெரிய விஷயமாக இருக்கிறதே; ம்… நடக்கும் ” என்றாராம். ஆனால் பாருங்கள்; அன்றைய தினத்திலிருந்தே என்னை இத்தனை ஆண்டுகளாகப் படுத்திக் கொண்டிருந்த அந்தக் காமம் என்ற நோய் என்னை விட்டு அகன்று விட்டது. சதா சர்வ காலமும் ரதி சுகத்தையே எண்ணிக் கிடந்த மனம் இப்போது சாந்தப்பட்டு விட்டது. இப்போது என்னால் எந்தப் பெண்ணையும் சகஜமாகப் பார்க்கவும் பேசவும் முடிகிறது.



இது பற்றி சில நண்பர்களிடம் சொன்ன போது அந்த அறிவாளிகள் ’ உங்களுக்கு வயதாகி விட்டது ’ என்றார்கள். அடக் கடவுளே! முதல் நாள் வரை இருபது முட்டையும், பதினைந்து கோழியும் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு மனிதனின் ஆக்ஞா சக்ரத்தில் நித்யானந்தர் கை வைத்த தருணத்திலிருந்து அந்த ஆள் ரெண்டு இட்லிக்கு மாறி விடுகிறான் என்றால் அவனுக்கு வயதாகி விட்டது என்றா அர்த்தம்? ஒரே நொடியில் வயதாகி விடுமா என்ன? காமம் என்பது தீ. நதியின் இரண்டு கரைகளிலும் தீப்பற்றி எரியும் போது யானைக் கூட்டம் நதியில் இறங்கி தங்களைக் காபந்து செய்து கொள்ளுமாம். யானைக்காவது வனத்தீயிலிருந்து நதியில் இறங்க வேண்டும் என்ற அறிவு இருக்கிறது. நானோ, அது கூட இல்லாமல் அந்த வெக்கையிலேயே கிடந்தேன். அதையே ஆனந்தம் என்று நம்பிக் கொண்டிருந்தேன். அந்த நிலையில்தான் நித்யானந்தர் நான் கேட்காமலேயே வந்து நதியாய் என்னைக் குளிர்வித்திருக்கிறார்.

***

மொத்தம் நான்கு முறை எனக்கு நித்யானந்தரை மிக நெருக்கத்தில் தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மூன்று முறை தியான வகுப்புகளில். ஒருமுறை பாத பூஜையில். பாத பூஜையிலும் என்ன வேண்டும் என்று கேட்டார். அவந்திகாவின் உடல் நலம் பற்றிக் கேட்க வேண்டும் என்று உள்ளுக்குள் மனப்பாடமே செய்து வைத்திருந்தேன். இறை சக்தியின் முகத்தைப் பார்த்ததுமே எல்லாம் மறந்து போயிற்று.



மற்ற இரண்டு முறையும் ‘என்ன வேண்டும்? ’ என்று கேட்ட போது, ஒருமுறை “உங்கள் ஆசீர்வாதமே போதும் சாமி ” என்றும், இன்னொரு தடவை “நீங்கள் எப்போதும் என்னுடனேயே இருக்க வேண்டும் ” என்றும் கேட்டுக் கொண்டேன். ஒருமுறை ஸ்வாமி இமயமலைக்குப் போயிருந்த போது நடந்த சம்பவம் இது. ஸ்வாமி தன்னுடைய சீடர்களுடன் அமர்ந்து ஏதோ முக்கியமாக உரையாடிக் கொண்டிருக்கிறார். அப்போது ஒரு வேலையாக சீடர்களில் ஒருவரை வெளியே அனுப்புகிறார். சென்றவர் வெகு நேரமாகியும் திரும்பி வரவில்லை. “எங்கே போனான் இவ்வளவு நேரம்? ” என்று கேட்டுக் கொண்டே வெளியே வந்து தேடியிருக்கிறார். பார்த்தால் ஒரு ஆழமான பள்ளத்தில் விழுந்து கிடக்கிறார் சீடர். ஒரு சத்தம் இல்லை; ஒரு முனகல் இல்லை. அவரை மேலே கொண்டு வந்த போது உடம்பில் சில இடங்களைக் காண்பித்து ” அங்கேயெல்லாம் தொட வேண்டாம்; எலும்பு முறிந்த மாதிரி தெரிகிறது ” என்று சொல்லியிருக்கிறார் அந்த சீடர். (பிறகு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த போது அவர் குறிப்பிட்ட இடங்களிலெல்லாம் – மொத்தம் ஏழு இடங்கள் - எலும்பு முறிந்திருந்தது தெரிந்திருக்கிறது). சீடரை பள்ளத்திலிருந்து மேலே கொண்டு வந்ததும் நித்யானந்தர் அவரிடம் ” ஏன் அப்பா, இவ்வளவு உயரத்திலிருந்து விழுந்து எலும்பெல்லாம் முறிந்திருக்கிறது; ஒரு சத்தம் போட வேண்டாமா? ” என்று கேட்க, “இது உங்களுடைய உடம்பு; உங்களுடைய உயிர். நான் ஏன் சத்தம் போட வேண்டும்? ” என்று கேட்டாராம் சீடர்.



“இன்னும் ஒரு ஆண்டுக் காலத்துக்கு படுக்கையை விட்டு எழுந்து நடமாடக் கூடாது ” என்று சொல்லியிருக்கிறார் மருத்துவர். “கவலையை விடு; இன்னும் மூன்று மாதங்களில் சரியாகி விடும் ” என்று அந்த சீடரிடம் சொல்கிறார் ஸ்வாமி.

அவர் சொன்னதைப் போலவே மூன்று மாதங்களில் எழுந்து நடக்க ஆரம்பித்து விடுகிறார் சீடர். இப்போது அவர் ஒரு ஆச்சாரியராக பிடதி ஆஸ்ரமத்தில் இருக்கிறார். வேதங்களின் சாரம் கீதை என்றும், கீதையின் சாரம் அதன் பதினெட்டாவது அத்தியாயம் என்றும், பதினெட்டாவது அத்தியாயத்தின் சாரம் அதன் 66-ஆவது ஸ்லோகம் என்றும் கூறுவர். அந்த ஸ்லோகம் இது:



ஸர்வதர்மாந்பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஷூச :

(18: 66)

தர்மங்கள் அனைத்தையும், அதாவது கடமைகள் அனைத்தையும் என்னிடம் அர்ப்பணம் செய்து விட்டு, சர்வ வல்லமை பொருந்திய, எல்லாவற்றிற்கும் ஆதாரமான, பரமேஸ்வரனான என் ஒருவனையே சரணடைவாயாக! நான் உன்னைப் பாவங்கள் அனைத்திலிருந்தும் விடுவிப்பேன். வருந்தாதே!



கிருஷ்ணன் கூறும் அப்படிப்பட்ட சரணாகதியையே மேலே குறிப்பிட்ட சீடரிடம் நாம் காண்கிறோம். இந்த நிலையை அடைவதற்கு நான் இன்னும் எத்தனையோ ஜென்மங்கள் எடுக்க வேண்டும். இருந்தாலும் “உனக்கு என்ன வேண்டும்? ” என்று அந்த கல்பதரு கேட்கும் போதெல்லாம் எதையும் கேட்கத் தோன்றாமல் ‘உங்கள் ஆசீர்வாதம் இருந்தாலே போதும் ” என்று கேட்டதற்காக உவகையே அடைகிறேன். ’ எப்போதும் உன்னுடனேயே இருப்பேன் ’ என்ற பரமஹம்ஸ நித்யானந்தரின் வரத்தை விடவும் அதிக மதிப்புடைய பொருள் இந்த வாழ்க்கையில் வேறு ஏதாவது இருக்க முடியுமா என்ன?



ஆனால் நித்யானந்தர் ‘எப்போதும் உன்னுடனேயே இருப்பேன் ’ என்று என்னிடம் மட்டும் சொல்லவில்லை. சென்னையில் நான்கு தினங்கள் நடந்த நித்யானந்த ஸ்புரணம் எனப்படும் தியான முகாமின் முடிவில் ஒரு மாபெரும் சொற்பொழிவை நிகழ்த்தினார் ஸ்வாமி. அவ்வளவு உருக்கமான, சத்தியத்தின் ஜ்வாலை தெறிக்கும் பேச்சை நான் அதுவரை என் வாழ்நாளில் கேட்டதில்லை. அந்த உரையின் முடிவில் ஸ்வாமி சொன்னார்: நான் இந்த உடலை விட்டுப் பிரிந்தாலும், நீங்கள் உங்களுடைய இந்த உடலை விட்டுப் பிரிந்தாலும் நான் உங்களை விட்டுப் பிரியாமல் உங்களுடனேயே இருப்பேன். இது சத்தியம்.



அந்த வார்த்தைகளைக் கேட்டபோது என் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ” நித்யானந்தர் யார்? ” என்று என்னிடம் கேட்டார் ஒரு நண்பர். அவரிடம் நான் சொன்னேன்:

அவர் ஒரு ஆன்மீக குரு அல்ல;

அவர் ஒரு ஞானி அல்ல;

அவர் ஒரு மகான் அல்ல;

அவர் கடவுள்!

***

கட்டுரையே முடிந்த பிறகும், அந்த மருத்துவமனைப் பெண் பதற்றத்துடன் ஸ்வாமியின் பிடதி ஆசிரமத்துக்கு போன் செய்து என்ன சொன்னார் என்பதைச் சொல்லவில்லை அல்லவா? ஸ்கேன் செய்து பார்த்ததில் அந்தப் பெண்ணின் கர்ப்பப்பையில் மூன்று குழந்தைகள் இருந்திருக்கின்றன. குழந்தை வேண்டும் என்று மூன்று முறை அல்லவா கேட்டார்? மூன்று குழந்தைகளை அவருடைய கர்ப்பப்பை தாங்காது என்றது மருத்துவ அறிக்கை. அதனால்தான் மீண்டும்

ஸ்வாமியிடம் தஞ்சம்

2 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இதை மீண்டு கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி!

kk said...

ஹி ஹி அருமை அருமை கல்பதருவிற்கு கீழே இருந்து கமராவேண்டும் என்று லெனின் கருப்பன் நினைத்திருப்பார் போலும்